முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் (Basil Rajapaksa) சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் இயலுமை அரசாங்கத்துக்கு உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், "ராஜபக்சர்கள் குறித்த விசாரணைகளுக்கு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடாக சாட்சியம் திரட்ட முயற்சிப்பது முறையற்றது.
விமல் வீரவன்ச பசில் ராஜபக்சவின் சொத்துக்கள் தொடர்பில் நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் இருந்து விமல் வீரவன்ச வெளியேற்றப்பட்டதன் பின்னர், அப்போதைய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அந்த குற்றச்சாட்டுக்கு அமைய, நிதி குற்றப்புலனாய்வு பிரிவு தற்போது விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் பதவி வகித்த போது விமல் வீரவன்ச பசில் ராஜபக்ச தொடர்பில் எவ்விதமான குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை.
அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னரே போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஆகவே விமல் வீரவன்சவின் நேர்மை மற்றும் உண்மைத்தன்மை மீது நம்பிக்கை கிடையாது" என்றார்.