இளங்குமரன் எம்பியால் மடக்கி பிடிக்கப்பட்ட வாகன விவகாரம்: நீதிமன்று வழங்கிய உத்தரவு

சாவகச்சேரியில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் வழிமறிக்கப்பட்ட சுண்ணக்கல் ஏற்றிய கனகர வாகனத்தை 5 இலட்சம் ரூபா பிணையில் எடுத்து செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கடந்த வாரம் சாவகச்சேரி பகுதியில் இரவு வேளை கனகர வாகனத்தில் சுண்ணக்கல் ஏற்றிச் செல்லப்படுவதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறித்த வாகனத்தை வழிமறித்திருந்தார்.

அச்சமயம் வாகன சாரதிக்கும் இளங்குமரனுக்கும் இடையில் அந்த பொருளை எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதி தொடர்பான வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீடு காரணமாக வாகனம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பில் அப்போது கருத்து தெரிவித்த இளங்குமரன், அந்த வாகனம் உரிய அனுமதிகள் பெறாது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்வாகனத்தை தான் மறித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவ்வாறு வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபார நிறுவனத்தின் உரிமையாளர் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது, சகல அனுமதிகளும் பெறப்பட்டு தாழ்ந்த வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் வேண்டுமென்றே தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நடந்து கொண்டதாகவும் கூறியிருந்தார்.

இதற்கிடையில், இது தொடர்பான வழக்கானது திங்கட்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வாகனத்தை எடுத்து செல்வதற்கு மன்று அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் பத்திரம் மூலம் நேற்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நிறுவனத்தின் சார்பில் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகி இருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் சட்டத்தரணி கலாநிதி குருபரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ”5 இலட்சம் ரூபா பிணையில் வாகனமும் கல்லும் விடுவிக்கப்பட்டது. இவ்வழக்கில் எனது கட்சிக்காரர் கல் அகழ்வு தொழிலை செய்பவர் அல்ல அனுமதி பெற்றவர்களிடம் பணம் கொடுத்து கற்களை வாகனங்களில் ஏற்றி விற்பனை செய்கிறார்.

2009 ஆண்டு 28 (2) சட்டம் இன்னும் திருத்தப்படவில்லை 1993 தொடக்கம் 2023 ஒழுங்கு விதிகள் யார் அனுமதி பெற வேண்டும் என தெளிவாக கூறுகிறது. அதனை விடுத்து அனுமதிகள் என கூறப்படும் விடயங்கள் எந்தச் சட்டத்தில் இருக்கிறது யாரிடம் பெற வேண்டுமென கூறினால் அதனையும் பெறத் தயாராக இருக்கிறோம் என மன்றுக்கு தெரிவித்தேன்.

அதனை விடுத்து இலங்கை அரசியலமைப்புச் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வராமல் அரச அதிகாரிகளினால் எழுதப்படும் கடிதங்கள் சட்டமாக கொள்ள முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஊடகங்களுக்கு தெரிவித்த பகுதியில் எனது கட்சிக்காரர் கற்களை பெறவில்லை, பலாலி பகுதியில் உரிய அனுமதி பெற்றவரிடம் கற்களை கொள்வனவு செய்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பொலிஸாரின் அதிகாரங்களை கையில் எடுப்பது தொடர்பில் மன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அதற்கு தனியான முறைப்பாடு ஒன்று இருப்பதால் அது பற்றி பின்னர் முடிவெடுப்போம்.

பொலிஸார் குழப்பகரமான சூழ்நிலை இருந்தபடியால் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். குறித்த வழக்கில் சந்தேக நபர் பெயர் குறிப்பிடப்படாமை தொடர்பில் மன்றுக்கு தெரியப்படுத்தினேன்.

அது மட்டுமல்லாது இரண்டு நீதிமன்றங்களில் சுண்ணக்கல் எடுத்துச் செல்வது தொடர்பில் நீதிமன்றங்கள் வழங்கிய கட்டளைகளை முழுமையாக மன்றில் சமர்ப்பித்தோம். சமர்ப்பணங்களை ஆராய்ந்த மன்று ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணையில் வாகனத்தையும் கல்லையும் விடுவித்ததுடன் எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு வழக்கு தவணை இடப்பட்டது” என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

MOHAMED SUTHAISY

Hello, I'm Faris Mohamed Suthaisy from Anuradhapura, Sri Lanka. I have diplomas in Information Technology, Web Design, and Computer Hardware Engineering, and I am skilled in professional phone & computer repair and web design . Currently, I'm pursuing a BTEC HND in Computing & Software Engineering at Pearson University. Additionally, I am the Owner and CEO of FAMILY MOBILE and SUNDAY BBC.

புதியது பழையவை

Reference for Result

Recent Post & News

نموذج الاتصال